அந்த அரபிக் கடலோரம்

வளைகுடா செய்திகள்

காதலுக்காக கோர்ட் படி ஏறும் சவுதிப் பெண்கள்

காலம் காலமாக தங்கள் தந்தைக்கோ அல்லது குடும்பத்தின் வேறு ஆண் தலைவர்களுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டியிருப்பதுதான் பெரும்பாலும் பழங்குடி கலாசாரத்தையே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சவுதி அரேபிய நாட்டில் வாழும் பெண்களின் தலையெழுத்து. பெண்கள் படிக்கலாமா, வேலைக்குப் போகலாமா, கல்யாணம் செய்து கொள்ளலாமா, அப்படிச் செய்து கொண்டால் யார் மாப்பிள்ளை இவை எல்லாவற்றிர்க்குமே நாட்டாமை வீட்டிலுள்ள ஆண் தலைவன் தான். அது அந்தப் பெண்ணைவிட இருபது வயது குறைவாக உள்ள அவள் இளைய சகோதரனாக இருந்தால்கூட.

அந்நாட்டில் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் கன்னியராகவே காலம் கழித்து வருவதற்கு இந்த கடுமையான ஆணாதிக்கமே காரணம் என்று கருதப் படுகிறது. இதில் நன்றாகப் படித்த மற்றும் நல்ல வேலைகளுக்குப் போகும் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். இவர்களைத் திருமணம் செய்து கொடுக்க இவர்களின் தந்தைமார்கள் முயற்சி செய்வதில்லை. சவுதி அரேபிய சட்டப்படி ஆண் குடும்பத் தலைவனின் எழுத்துபூர்வ அனுமதி இல்லாமல் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள முடியாது.

இதனால் நொந்துபோன பல சவுதிப் பெண்கள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இவர்களின் கனவுகள் என்னவோ சவுதிப் பாலைவனத்துக் கானல் நீராகத்தான் இருக்கிறது. இப்படித்தான் ஒரு 42 வயதான டாக்டர் பெண்மணி, தன்னுடன் பணிபுரியும் அறுவைசிகிச்சை நிபுணரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அந்த ஆண் வேறொரு பழங்குடியினைச் சேர்ந்தவர் என்று கூறி அவரது தந்தை அனுமதி மறுத்துவிட்டார். இதனால் மணமுடைந்த அந்தப் பெண் டாக்டர் மதீனா நகரத்து நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், கடந்த ஜூலை மாதம் மதீனா கோர்ட் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

அவரது தந்தையின் மறுப்பு சரியானதே என்றும், அவரது விருப்பத்துக்கு மாறாக வேறொரு குடியினைச் சேர்ந்தவரை மணக்க விரும்புவதன் மூலம் அந்தப் பெண் குடும்பத்துக்குக் கீழ்ப்படியாமல் நடக்க முயல்கிறார் என்றும் கோர்ட் தீர்ப்பளித்தது.!

சில குடிகளில் பெண்கள் பிறந்த உடனேயே அவள் இன்னாருக்குத்தான் என்று முடிவு செய்யப் பட்டுவிடுகிறது. பெரும் வயது வித்தியாசம் ஒரு தடையாகக் கருதப்படுவதில்லை.

இப்படி சிறு குழந்தையாக இருக்கும்போது ஒரு பெண் அவரது தந்தையின் சகோதரர் மகனுக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப் பட்டார். சில வருடங்களில் ஒரு குழந்தையும் பிறந்த பின் அவள் கணவனிடமிருந்து பிரிந்து ஏற்கெனவே தந்தையிடமிருந்து பிரிந்திருந்த தன் தாயுடன் வசிக்க வேண்டியதாயிற்று. பின்னர் அந்தப் பெண் பல் மருத்துவம் படித்து தன் படிப்பை முடிக்கும் தறுவாயில் உடன் படிக்கும் ஒருவரை மணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் அவரது திருமணத்துக்கு சம்மதிக்காத அவரது தந்தை வலுக்கட்டாயமாக அவரை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணும் கோர்ட்டை அணுகி தீர்ப்புக்குக் காத்திருக்கிறார்.

அங்குள்ள மனித உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ஸுஹைலா ஜைனல் அபெதின் என்ற பெண்மணி துரதிருஷ்டவசமாக இந்த நாட்டில் பத்து வயதுப் பெண்கள் திருமணம் செய்து வைக்கப் படுகிறார்கள். ஆனால் மெத்தப் படித்து உயரிய பணியில் இருக்கும் ஒரு 40 வயதுப் பெண் தனக்குப் பிடித்த அல்லது ஒப்புதல் உள்ள ஒருவனை மணக்க முடியாமல் தடுமாறுகிறார்” , என்று கூறினார்.

இந்தக் கருத்தை ஒப்புக் கொண்ட அமல் ஸாலேஹ் என்கிற பல்கலைக் கழக பேராசிரியர், பல ஒத்த கருத்து கொண்டவர்களுடன் சவுதிப் பெண்களுக்குத் திருமண உரிமை கோரி இணைய தளம் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இஸ்லாமிய போதனைகளின்படி ஒரு பெண் ஒரு உண்மையான இஸ்லாமியராகவும் நன்னடத்தை உள்ளவராகவும் இருக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அதை நிறைவேற்றி வைப்பது அவரது தந்தையின் கடமை என்று அரேபிய நாட்டில் உள்ள இஸ்லாமியச் சான்றோர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இஸ்லாமிய ஷாரியா சட்டமும் பழங்குடிச் சட்டங்களும் பின்னிப் பிணைந்திருக்கும் சவுதியில், பெண்களின் வாழ்வு மொத்தமாக ஆண்களின் கைகளில்தான் இருக்கிறது. அங்கே அரசாங்க அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளின் கைகள் கட்டப் பட்டே இருக்கின்றன.

பூகோள ரீதியாக சவுதி அரேபியா மிகப் பெரிய மற்றும் எண்ணை வளத்தால் செல்வம் கொழிக்கும் நாடாகும். ஆனால் சமூகக் கதவுகள் உறுதியாக அடைக்கப் பட்டிருப்பதாலும் தளைகளற்ற கல்வி பரவலாக இல்லாமலிருப்பதாலும் அங்கங்கே இன்னும் பழங்குடிகளாக பழங்காலச் சட்டங்களுடனே மக்கள் வாழ்க்கை முறை தொடர்ந்து வருகிறது. தங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்தவரைத்தான் தங்கள் பெண்கள் மணக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பல நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் சவுதி அரேபியாவுக்கு வந்து பல லட்சங்களில் சம்பாதித்துக் கொழித்தாலும், சவுதி நாட்டைச் சேர்ந்த இதுபோன்ற எண்ணற்றவர்கள் பரம ஏழைகளாக வசிக்க இடம் கூட இல்லாமல் பரிதாபமாக வாழ்ந்துவருகிறார்கள் என்பதும் ஒரு நம்ப முடியாத உண்மை. அந்த நாட்டு அரசாங்கம் அவர்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்த போதிலும் அந்த மக்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்தாமலும் பயன்படுத்த விரும்பாமலும் இருக்கிறார்கள் என்பதும் ஒரு கசப்பான உண்மைதான்.

இவர்களை இவர்கள் போக்கில் விடுவதுதான் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார சக்திக்கு ‌இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்கு வழி என்பதால் ஆட்சியாளர்களும் இவற்றில் தலையிடாமல் ஒதுங்கியே வருகிறார்கள்.

ஆர்வி

செய்திக்கட்டுரைக்கான ஆதாரங்கள்: (இணைய தளத் தொடர்புகள்)

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5i4lRdmT5NYBdWpoo92qNB4WMQkzg?docId=CNG.bfa4dd1c8187bf1b10d85e4c03968e7b.571

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2010091783225

Advertisements