சிரிச்சி சிரிச்சி வந்தா சீனாதானா டோய்

சத்தமில்லாமல் சக்தியைச் சேர்க்கும் சீனா

ஆர்வி

கடந்த (2010) ஏப்ரல் மாதம் சீனாவின் கப்பற் படை எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென்று 10 போர்க் கப்பல்களை ஜப்பானின் கரையறுகே நிறுத்தி, தன்னுடைய போர் ஹெலிகாப்டர்களையும் ஜப்பானின் கப்பல்களுக்கு மேலே ரீங்காரமிட வைத்து ஒரு கலக்கு கலக்கியது. பின்னர் ஜூலை மாதம், சீனாவின் அயல் உறவு மந்திரி தென் சீன கடல் பகுதியில் உள்ள உலக நாடுகளுக்குப் பொதுவான நீர்ப் பரப்பையும் மற்றும் அப்பகுதியில் உள்ள பல சிறு தீவுகளையும் சீனாவிற்குச் சொந்தம் கொண்டாடினார். இந்தத் தீவுகள் உண்மையில் சுற்றியுள்ள பல தென் கிழக்கு நாடுகளுக்குச் சொந்தமானவையாகும். (தென் சீனக் கடல் என்பது ஒரு பெயர்தான். எப்படி இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல நாடுகள் உள்ளனவோ அது போல இப்பகுதியிலும் உள்ளன.) சென்ற மாத தொடக்கத்தில் ஒரு சீன மீன்பிடி ட்ராலர் இரண்டு ஜப்பானிய கடற்கரை பாதுகாப்புப் படைப் படகுகளின் மீது தைரியமாக வேண்டுமென்றே மோதியது. அந்த ட்ராலரின் சீன மாலுமிகள் ஜப்பானியரால் கைது செய்யப் பட்டபோது சீனா பெருங்குரலுடன் அதை எதிர்த்தது.

இதைத்தவிர சமீபகாலமாகவே சீனர்கள் பல அரசியல் வெற்று முழக்கங்களை (rhetorics) வேண்டுமென்றே எழுப்பி வருவதாக கருதப் படுகிறது. உதாரணமாக, இரண்டு வாரங்களுக்கு முன் ஐநா சபைக்கான சீன அதிகாரி தனக்கு அமெரிக்கா பிடிக்காது என்று வெளிப்படையாகப் பேசினார். சீனாவின் ராணுவ, பிரதேச விஸ்தரிப்பு முயற்சி மற்றும் அயல்நாட்டுடான உறவு தொடர்பான நடவடிக்கைகள் போன்றவற்றில் சீற்றம் சற்று கூடியிருப்பதாகவும் கருதப்படுகிறது. சீனாவின் கோணத்தில் பார்த்தால் கூட இந்த நடவடிக்கைகளில் உருப்படியான அர்த்தம் எதுவும் இருப்பதாக தெரியாததால் மேல் நாட்டு அரசுகளும் அரசியல் வல்லுனர்களும் சற்று குழப்பம் அடைந்திருப்பதாகவே தோண்றுகின்றது.

ஒரு பள்ளிக்கூட குண்டன் நோஞ்சான் பசங்களை விரட்டுவது போல சீனா ஏன் சுற்றுவட்டார நாடுகளை பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்?

கடந்த பத்தாண்டுகளில் சீனா தன்னுடைய பொருளாதார வளர்ச்சியில் கவனத்தைத் திருப்பிவிட்டு மற்ற விஷயங்களில் சற்று அடக்கியே வாசித்துக் கொண்டிருந்தது. ஒரு உலகப் பெரும் வல்லரசு போல அல்லாமல் ஒரு பன்னாட்டு வணிக நிறுவனத்தைப் போல தன்னைச் செலுத்திக் கொண்டு இருந்தது. நினைக்க முடியாத அளவு உலகம் முழுவதும் தனது செல்வத்தைச் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தனது அரசியல் செல்வாக்கையும் எல்லா இடங்களிலும் பரப்பிக் கொண்டது.

உலகைச் சுற்றி பார்த்தோமானால் சீனா தனது நெருப்புக் கரத்தினால் எல்லா பிரதேசங்களிலும் வலுவாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. அதையும் அசாத்திய புத்திசாலித் தனத்துடன் செய்துள்ளது. உதாரணமாக, கடந்த பத்து ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழித்தும் தன்னாட்டு வீரர்களின் இன்னுயிரைப் பலி கொடுத்தும் அந்த நாட்டு மக்களைக் காத்து வருகின்றது. அங்கே சீனா எப்படிக் குளிர் காய்கிறது? உலகத்தின் மிகப்பெரிய தாமிரக் கணிமக் குவியலாகக் கருதப்படும் இடத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு தன்னுடைய நாட்டிலுள்ள பரம ஏழைகளையும் சிறைக்கைதிகளையும் அடிமைகள் போல நடத்தி அதே அமெரிக்கர்களின் பாதுகாப்பில் குறைந்த செலவில் நிறைந்த லாபத்தை அடையும் செயலில் மும்முரமாக உள்ளது! பழி உனக்கு. பணம் எனக்கு! அதுபோல அமெரிக்கர்கள் பெருத்த பணம் மற்றும் உயிர்ச்செலவைச் செய்தும் கெட்ட பெயரை மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருக்கும் போது முதலீடு செய்வதாலும், சில ஆஃப்கானிக்களுக்காவது வேலை கொடுப்பதாலும் சீனா நல்ல பெயரை மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருக்கிறது! எதிர் காலத்தில் அமெரிக்காவின் செலவில் சீனா ஆஃப்கானிஸ்தானில் பெரும் செல்வாக்குள்ள நாடாகத்திகழும் என்றே கருதப்படுகிறது.

அது போல, ஈராக்கில் பெருத்த பணம் மற்றும் உயிர்ச் செலவில் அமெரிக்கா ஒரு சர்வாதிகாரியைக் கீழே இறக்கி அந்த நாட்டுப் பாதுகாப்புக்காக இன்னும் இவற்றைச் செலவிட்டுக் கொண்டிருக்கும்போது அமெரிக்க கம்பெனிகளைவிட சீனக்கம்பெனிகள்தான் அங்கே எண்ணெய் நிறுவனங்களில் அதிக மூலதனம் செய்திருக்கின்றன.

பாகிஸ்தானில் அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி அபரிமிதமாக ராணுவ மற்றும் நிவாரண உதவிகள் வழங்கி தாலிபான்கள் போன்ற உள்நாட்டு கலவரவாதிகளிடமிருந்து நாட்டையும் அதன் தலைவர்களையும் காப்பாற்றி வருகிறது. அந்தப் பாதுகாப்பு வளையத்துக்கு உள்ளே மற்றொரு பக்கம் சீனா கமுக்கமாக துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் சுங்கவரியற்ற வர்த்தகப் பகுதிகள் போன்றவற்றில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.

அடக்கி வாசி!
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் உலகநாடுகளின் பெருத்த தலைவலியாக உள்ள தீவிரவாதம் போன்றவற்றில் தன் மூக்கை நுழைத்தும் கருத்துக்கள் சொல்லியும் பிரச்சனை செய்துகொள்ளாமல், இரண்டு பக்கமும் அனுசரித்துக் கொண்டு கருமமே கண்ணாக பணம் பண்ணுவதில் மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் சீனா சமர்த்தாக செலுத்தி வருகிறது.

அதைப்போல, வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்களின் விழிப்புணர்ச்சியால் வந்த பொறுப்புணர்வால், சுற்றுப்புறச்சூழலை நெறிப்படுத்தவும் மாசுக்கட்டுப்பாட்டை பலப்படுத்தவும் தூய எரிபொருள், சுற்றுப்புற சூழலுக்குகந்த உற்பத்தி முறைகள் போன்றவற்றில் பெரும் செலவுகள் செய்யப் படுகின்றன. ஒருபக்கம் இவற்றிற்காக அதீத விலைகளில் சூரியக் கதிர் இயந்திரங்கள், காற்றாலைகளை சீனா சப்ளை செய்கிறது. காற்றாலை உற்பத்தியில் உலகத்தின் முதல் மூன்று கம்பெனிகள் சீனாவைச் சேர்ந்தவை! மற்றோர் புறம் சீனா, தன் சொந்த நாட்டில் மாசுக்கட்டுப்பாட்டுக் கொள்கைகளை உடைப்பில் போட்டுவிட்டு பெரும் மாசுகளை உண்டாக்கும் நிலக்கரி சார்ந்த தரமற்ற மாபெரும் மின்னாலைகளைக் குறைந்த செலவிலே அமைத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மாசுபடுத்தும் புதிய மின்னாலைகள் தற்போது அந்நாட்டில் பத்து நாளைக்கு ஒன்று திறக்கப்படுகின்றதாம். உலகத்தின் சுற்றுப்புறக் கேட்டை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மலிவும் வலிவும்
ஜனநாயகம் என்ற தொந்தரவில்லாமல் தனது சர்வாதிகார பலத்தால் தொழிலாளர்களை அடிமைபோல நடத்தி மிகக் குறைந்த கூலிகொடுத்து மலிவான விலையில் ஏற்றுமதி செய்து உலகம் முழுவதும் தன்னுடைய பொருட்களின் விற்பனையை சீனா விஸ்தரித்துக் கொண்டது உலகம் அறிந்ததே.

ஆனால் உலகம் அவ்வளவாக அறியாததும் ஒன்று உண்டு. இன்னொரு முக்கியமான துறையில் அதாவது செல்ஃபோன், லேசர், கணிணி, சூரியக் கதிர் பலகைகள், காற்றாலை இயந்திரங்கள் போன்றவற்றிற்குத் தேவைப்படும் ப்ரோமீத்தியம், இட்டர்பியம் போன்ற சில அபூர்வ நிலக் கணிமங்களின் தயாரிப்பில் சீனாவின் அதிகாரம் கிட்டத்தட்ட நூறு சதவீதம் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தக் கணிமங்கள் எவையும் சீனாவில் கிடைப்பதில்லை என்பதுதான் இதில் ஆச்சரியப் படத்தக்க விஷயம். ஆனால் ஏன் சீனா இதில் முன்னிலை வகிக்கிறதென்றால் மிகவும் அசுத்தமான, தரமற்ற முறைகளில், வேறுவழியில்லாமல் வரும் அடிமைத் தொழிலாளர்களைக் கொண்டு மட்டுமே இவற்றைச் சுரங்கங்களிலிருந்து எடுக்கவும் பகுக்கவும் முடியும். ஆகவே உலகத்தின் பல நாடுகளிலுள்ள இச்சுரங்கங்களை சீனா மட்டுமே குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆபத்து என்னவென்றால், இந்தக் குறைந்த விலையுள்ள ஆனால் முக்கியமான பொருள்களில் தன்னுடைய ஏகபோக செல்வாக்கை வைத்துக் கொண்டு பின்னாளில் சீனா வளர்ந்த நாடுகளைக் கூட மிரட்ட முடியும்.

உதாரணமாக, கடந்த வாரம், தன்னுடைய மாலுமிகளைக் கைது செய்ததற்கு பதிலடியாக, ஜப்பானுக்கு ஒப்பந்தமாயிருந்த இப்பொருள்களின் ஏற்றமதிகளை சீனா நிறுத்தி வைத்தது! விடுமுறைகளால்தான் என்று சீனா சமாதானம் சொன்னாலும், உலக நாடுகள் இதை நம்பத் தயாராக இல்லை.

இப்படி வர்த்தகத் துறையில் தன்னை வலுவாக வைத்துக் கொண்டிருக்கும்போது, சீனா ஏன் இப்போது அரசியல்ரீதியாக இரைச்சல் கிளப்புகிறது? எதற்காக ஜப்பானுக்கு எதிரான ராணுவச் சீண்டல்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நிம்மதியைக் குலைக்கும் முயற்சிகள்? ஏனென்றால், சீனா இப்படிச் செய்யும் போது வளர்ந்த நாடுகள் உண்மையிலேயே சற்று அச்சமடைகின்றன. தங்களுடைய தற்போதைய தேவைகள் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக ஓடிப் போய் சமாதானம் செய்து கொள்கின்றன. முக்கியமாக இப்போது வளர்ந்த நாடுகள் பொருளாதார ரீதியாக வலுவிழந்து இருக்கும் போது சீனாவோ மிகவும் வலிமையாக இருக்கிறது. சீனாவின் சிறு நடவடிக்கைகூட பல உலக நாடுகளைப் பாதிக்கலாம்!

அச்சம் உணர்
ஆக, உலக நாடுகள் மிகவும் அச்சப்பட வேண்டிய விஷயம் சீனாவின் ராணுவமோ அதன் அயல் நாட்டு தூதர்களின் அலட்டலான அதிகாரமோ அல்ல. ராணுவ சக்தி தேவைப் படாமல் உலக முழுவதும் வியாபித்திருக்கும் சீனாவின் பொருளாதார சக்தியே உண்மையில் உலக நாடுகள் முழுவதும் மிகவும் பயப்பட வேண்டிய விஷயம்.

Advertisements