கமலஹாசனின் விஷப் பரிட்சை

தன்னுடைய படத்தைத் தன் விருப்பப்படி வெளியிட கமலஹாசனுக்கு முழு உரிமை உள்ளது என்பதே என் கருத்து. தங்கள் திரையரங்குகளில் திரையிடுவதா வேண்டாமா என்ற வர்த்தக ரீதியான முடிவைத் திரையரங்கு உரிமையாளர்கள் தாங்களே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு இயக்கமாக முடிவெடுத்து படவெளியீட்டுக்கு இடைஞ்சல் செய்வது நியாயமற்றது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் கமலஹாசன் எடுத்திருப்பது சரியான முடிவுதானா? எனக்கென்னவோ கமல் ஒரு விஷப் பரிட்சையில் இறங்கியிருப்பது போல்தான் தோன்றுகிறது.

இது பல கோடிகள் செலவழிக்கப் பட்டு தயாரிக்கப் பட்ட ஒரு பிரம்மாண்டமான படம் என்று சொல்கிறார்கள். இப்படிப் பட்ட படத்தை நல்ல தியேட்டரில் பார்த்தால்தான் அதன் முழுப் பரிமாணமும் விளங்கும். வீட்டில் இருக்கும் டீவியில் பார்த்தால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்களுக்கு அந்த அளவு திருப்தி கிடைக்காமல் போகலாம்.அவர்களிடமிருந்து பரவும் செவிவழி விமர்சனங்கள் படத்தின் ஓட்டத்தைப் பாதிக்கலாம்.

இரண்டு, இப்போதே ஹோட்டல்கள் போன்ற பொது இடங்களில் நூற்றுக்கணக்கான ரசிகர்களுக்கு சட்டத்திற்குப் புறம்பானமுறையில் படத்தைத் திரையிட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இது எந்த அளவு தியேட்டர் வாடிக்கையைப் பாதிக்கும் என்று தெரியவில்லை.

மூன்று, DTHஇல் பார்ப்பவர்கள் படத்தைப் பதிவு செய்து கொள்ள முடியாது என்று கமல் கூறியிருப்பதாகத் தெரிகிறது.ஆனால் DTHஇல் இருந்து கம்ப்யூடரில் சுலபமாக பதிவு செய்ய முடியும். அதனால் சட்டபூர்வமாக அருமையான காப்பிகளைப் பலர் அடையப் போகிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இது தவிர நுகர்வோர் என்ற முறையில் எனக்கு வேறு ஒரு சந்தேகமும் தோன்றுகிறது. மின்சாரத்தைத் துண்டிப்போம் என்று தனக்கு மிரட்டல் விடப்பட்டதாகக் கமலஹாசன் கூறியிருக்கிறார். யாரும் துண்டிக்காமல் இருக்கட்டும். ஆனால் நிஜமாகவே மின்சாரம் தடைப் பட்டால் ஆயிரம் ரூபாய் கட்டி படத்தைப் பார்க்கவிருக்கும் ரசிகர்களுக்கு என்ன ஆகும். பணம் திரும்பத் தரப் படுமா அல்லது இரண்டாவது முறைபார்க்க வாய்ப்புதான் அளிக்க முடியுமா? இரண்டுமே சாத்தியப் படாதவை.

ஆகக் கூடி கமலுக்கு மட்டுமல்ல, பணத்தைக் கட்டி படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும் இது விஷப் பரிட்சைதான் என்று தோன்றுகிறது.

Advertisements