கமலுக்கு ஆதரவாக ரஜினியும் நேர்மையான எண்ணங்களுடன் குரல் எழுப்பியிருக்கிறார்.

கமல் இஸ்லாமுக்கும், முஸ்லீம்களுக்கும் இழிவு வருமாறு படம் எடுத்திருப்பார் என்று என்னாலும் நம்ப இயலவில்லை. அவரால் அது முடியாதது.

உண்மையில் ஹிந்துக்களுக்கும், முக்கியமாக அவருடைய சமுதாயத்தினருக்கும் சற்று வருத்தம் வருமாறுதான் அவர் நடந்து கொண்டார். அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. திராவிடர் கழகத்திலும் அவர் உருப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆனால் தன்னுடைய படங்களில் அவரை முஸ்லீம்கள் மேல் மிகுந்த மதிப்பு வருமாறுதான் எப்போதுமே சித்தரித்திருந்தார்.

உதாரணத்துக்கு மூன்று படங்கள். 1. அவ்வை சண்முகி – இதில் நாசரை அவருக்குத் தக்கசமயத்தில் தியாகம் செய்து தோள் கொடுக்கும் முஸ்லீம் நண்பராகக் காட்டியிருந்தார். 2. குருதிப்புனல்: இதில் இந்துவான தன்னை துரோகம் செய்பவராகவும் இவருடைய சக உளவு அதிகாரியும் நண்பருமான முஸ்லீம் அதிகாரியைத் தியாகம் செய்பவராகவும் காண்பித்தார். 3. தசாவதாரம்: இதில் ஒருபடி மேலே சென்று கருணையுள்ள முஸ்லீம் தாயாக கே. ஆர். விஜயாவையும், தன் சொத்துக்களை விற்று சமுதாயத்திற்கு உதவும் முஸ்லீம் தந்தையாக நாகேஷையும், அவர்களுடைய அன்பு மகனாகத் தன்னையும் சித்தரித்திருந்தார். இந்தப் படத்தில் முஸ்லீம்களைப் பொதுவாக தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதற்கும் (typecasting) மக்கள் மனதில் நன்றாகப் படுமாறு எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தார்.

விஸ்வரூபம் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்திவரும் அமைப்புகள் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி வருவதன் மூலம் தங்கள் சமுதாயத்தினருக்கு, முக்கியமாக ஏழை எளிய முஸ்லீம் மக்களுக்கு, எதிர்கால பாதிப்பைத் தான் உண்டாக்குவார்கள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

Advertisements