ஜானகியும் பத்ம விருதும்

எஸ் ஜானகி பத்ம விருதை வேண்டாம் என்று கூறிய செய்தி மிகவும் வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. விருதுகளை இந்த அரசாங்கம் (பொதுவாக காங்கிரஸ் ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள்) கேலிக்கூத்துக்களாக்கி விட்டன. நம் நாட்டில் நிலவும் மற்ற பல அவலங்களைப் போல இந்திரா காந்தி காலத்தில்தான் இந்த அவலமும் தொடங்கியது.

எம்ஜியாருக்கு ரிக்ஷாக்காரன் படத்துக்காக நாட்டின் சிறந்த நடிகருக்கான பாரத் விருது (சிறந்த நடிகருக்கான விருது) வழங்கப்பட்டது அந்தக் காலத்தின் மிகத் துயரமான நகைச்சுவையாக இருந்தது. முழுக்க முழக்க அரசியல் காரணத்துக்காக மட்டுமே இந்த அவலம் நிகழ்ந்தது. வாழ்வின் இறுதி வரை சிவாஜிக்கு மத்திய அரசின் பாரத் பட்டம் வழங்கப்படவில்லை.

மத்திய அரசால் புறக்கணிக்கப் பட்ட மற்றொரு நடிப்பின் சிகரம் நாகேஷ். இறுதிவரை அவருக்கு எந்த பத்ம விருதும் கிட்டவில்லை. எம் எஸ் விஸ்வநாதன் இன்னும் முறையாக மத்திய அரசினால் கௌரவிக்கப் படாததில் தன் ஆதங்கத்தைச் சமீபத்தில் தமிழ்நாடு முதல்வரும் வெளியிட்டார்.

வடஇந்தியாவைப் பொறுத்தவரை தாராளமாக வழங்கப்படும் இவ்விருதுகள் தென்னிந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஏனோ தானோவென்றுதான் கொடுக்கப் படுகிறது. தமிழ்நாட்டின் கேவலமான அரசியலும் இதில் புகுவதால் தமிழர்கள் தேசிய அளவில் தகுந்த மதிப்பையும் மரியாதையையும் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் மலையாளிகளுக்கு உள்ள கெட்டிக்காரத்தனம் தமிழனுக்கு என்றுமே வராது. தமிழன் என்றுமே சோப்ளாங்கிதான். மலையாளிகள் மலையாளப் படங்களுக்காகவும் விருது பெறுவார்கள். மற்ற மொழிகளிலும் அவர்களே அதைத் தட்டிச் செல்லவும் செய்வார்கள். சமீபத்தில்கூட விருது பெறுவதற்காகவே தமிழர்கள் கலப்பில்லாத தமிழ்ப் படத்தைத் தயாரித்துத் தேசிய விருதை வாங்கிக் கொண்டு போனார்கள். எல்லா இடங்களிலும் வியாபித்துள்ள அவர்களுடைய பலம் அப்படி.

கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் சுயகாரணங்களுக்காகவும், குடும்ப முன்னேற்றத்துக்காகவும் தகுதியற்ற நபர்களுக்குப் பரிசுகள் பரிமாறப்பட்டன.

இந்த மானம் கெட்ட தேசத்தில்தான் சிவாஜிக்கும் நாகேஷுக்கும் கிடைக்காத மத்திய அரசு விருதுகள் தனுஷுக்கும் விவேக்குக்கும் கிடைக்கும். சுய மரியாதை உள்ளவர்களாக இருந்திருந்தால் இந்த இருவருமே தகுதியில்லாமல் கிடைத்த விருதுகளைப் புறந்தள்ளியிருப்பார்கள். சிவாஜிக்கும் நாகேஷுக்கும் கிடைக்காத இவ்விருதுகள் எங்களுக்கும் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள்.

அதனால் பத்மவிருதை ஜானகி புறந்தள்ளியதில் என்னைப் போல யாருமே மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். இதற்கு அசாத்திய துணிச்சலும் சுய கௌரவமும் வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையாக சுயமரியாதை உள்ளவராக ஜானகி ஒருவர்தான் இப்போது தோன்றுகிறார். இவரும் தமிழரல்லர் என்பது நமக்கு ஒரு ஓரத்தில் குறைதான். எப்போது ஒரு தமிழனும் தன் சுயமரியாதையை நிலைநாட்டப் போகிறானோ?

ஆனாலும் தென்னிந்தியர்கள் மதிக்கப்படுவதில்லை என்று கூறி அத்தனை தென்னிந்தியர்களுக்காகவும் இவர் தனியொருவராகக் குரல் கொடுத்து அவரைப் போற்றிப் புகழ்பாடும் அத்தனை தென்னிந்தியருக்கும் பேருதவி புரிந்திருக்கிறார் என்பது உண்மை. அவரை வாழ்த்துவது நம் கடமை.

இருப்பினும் லதா மங்கேஷ்கரைவிட ஜானகி எந்த விதத்திலும் குறைந்தவரல்லர் என்றாலும் தனக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறாமல் இருந்து அனாவசிய விமர்சனங்களை அவர் தவிர்த்திருக்கலாம்.

அதனால் என்ன? தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறை வருமோ? சிக்கல் சிங்காரவேலரும் சிங்காரவேலனே தேவாவும் உள்ளவரை ஜானகியின் புகழும் நிலைத்து வாழும் என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.

Advertisements