வளைகுடா நாட்டில் உள்ள ஒரு தியேட்டரில் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை காலை 11 மணி சிறப்புக் காட்சியைக் காண என்னையும் சேர்த்து சுமார் 15 பேரிருந்தனர். நம் ஊரில் வெள்ளிக்கிழமை படம் வெளியாவதுபோல் இங்கு வியாழக்கிழமையே வெளியாகி விடுகிறது. ஆதலால் படம் இங்கே இரண்டாவது நாள். டிக்கட் விலை 30 திர்ஹாம் – நம்ம ஊர் மதிப்பில் சுமார் 500 ரூபாய். 

உண்மையில் கூட்டத்தை வைத்து கமர்ஷியல் படங்களின் தரத்தை சுமாராக நிர்ணயித்துவிடலாம். இன்றைய அனுபவம் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

பல படங்களைப் பார்க்கும் போது மனத்தில் வருத்தம்தான் வரும். இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் அப்படி ஓர் உணர்வுதான். 

பல நூறு கோடிகளையும், பல நாட்கள் உழைப்பையும் படம் பார்க்க வரும் பல்லாயிரக்கணக்கானவர்களின் நேரத்தையும் முழு அக்கறையின்மையால் வீணாக்கி விடுகிறார்கள். இந்தப் படம் அந்த ரகத்தைச் சேர்ந்ததே. 

இவ்வளவு செய்பவர்கள் திரைக்கதையில் மெனக்கெட மாட்டேனேன்கிறார்களே, அதுதான் சோகம். திரைக்கதைதானே படத்தின் உயிர் நாடி? எவ்வளவு சமயம் ஆனாலும் அதை முதலில் முழுமையாக மெறுகேற்றிக் கொண்டுதானே களத்தில் இறங்க வேண்டும்? இந்தப் படத்திலும் திரைக்கதையில் முழுமையான அக்கறை செலுத்தாததால் படம் காமா சோமா என்றுதான் ஊசலாடிக்கொண்டே செல்கிறது. 

முதலில் அனுபவம் இல்லாத சௌந்தர்யா ரஜினிகாந்த் பட இயக்கத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதே தவறு. திரைக்கதையில் ரஜினியும் நாட்டம் செலுத்தவில்லையோ என்றும் தோன்றுகிறது.  ஏற்கனவே மெதுவாகச் செல்லும் படத்தை ஏராளமான பாடல்கள் மேலும் தள்ளாட வைத்துப் பல தடவை கொட்டாவி விடவும் வைக்கின்றன. ஒரு குழந்தைகள் பத்திரிகைக் கதையைப் போன்ற மிகச் சாதாரண கதை. ஏதோ காலேஜ் நாடகத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொள்வதைப் போல எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். படத் துவக்கத்தில் படத்தை அறிமுகம் செய்யும் நபரின் குரல் நன்றாக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பு சில டீவீ தொகுப்பாளர்களுடையதைப் போலக் கேவலமாக இருந்தது. ரஜினியின் உச்சரிப்பே சற்று குளறுவது போன்று இருந்தது பிரமையா நிஜமா என்று தெரியவில்லை. 

தமிழ்நாட்டு அரசனின் படையில் ஆப்பிரிக்க யானைகளைக் கொண்டு வந்தது ஒரு சாதனை. இருக்கும். கப்பல்ல கொண்டு வந்திருப்பாங்க.சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதன் அவசியத்தைப் பற்றி ரசூல் பூக்குட்டி ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்திருந்தார். கொஞ்சம் சௌந்தர்யாவுக்கும் சொல்லியிருக்கலாம்.

ரஜினி அரசனைக் கொல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் குழந்தைத் தனமாக இருந்தன. அவை ரஜினியின் கேரக்டருக்கே விரோதமாகவும் இருந்தன. 

நல்ல இசை விழலுக்கு இறைத்த நீர். என்னுடைய கணிப்பு சரியென்றால் ரஜினியால் கூட இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. 

Advertisements