திமுக ஏன் தோற்றது?

  1. ஜெயலலிதா முதல்வரானாலும் பரவாயில்லை ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என்று கருணாநிதியின் மற்ற சில வாரிசுகள் மட்டுமல்ல கருணாநிதியே நடந்து கொள்வது போல் தான் இருந்தது அவரது பேச்சுக்களும் நடவடிக்கைகளும்.
  2. கிருஷ்ணர் போன்று பற்றற்றும், தெளிவுடனும் முதிர்ச்சியுடனும் இருந்திருக்க வேண்டிய கருணாநிதி திருதராஷ்ட்ரன் போல குடும்பப் பிணைப்புகளுக்குள் அல்லாடி தன்னிலை தவறி கட்சியின் தோல்விக்குக் காரணமானார். ஸ்டாலின் ஒருவர் மட்டுமே முன்னிறுத்தப் பட்ட போது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் ஸ்டாலின் தனது பதினாலாவது வயதிலிருந்து அரசியலில் தீவிரமாக இருந்தார். அவசர நிலையின்போது சிறை சென்று பல கொடுமைகளை அனுபவித்தார். கட்சியின் ஏற்றங்களிலும் இறக்கங்களிலும் தளராமல் தன்னை முன்னிறுத்தி ஒரு தளபதி போல்தான் இருந்தார். ஆனால் தலையெடுத்த மற்ற உறவுகள் ஏனோ திமுக குடும்பச் சொத்து போல பங்கு கேட்ட போது கருணாநிதி பாசத்தின் பலவீனத்தில் வீழ்ந்தார். அவர்களை அடக்கிவைக்கும் திறனில்லாமல் கட்சியைச் சிதைத்து குடும்பத்தைக் காத்தார். (தகுதியுள்ள) ஒரு மகன் துணை முதல்வர். ஒரு மகன் மத்திய அமைச்சர். துணைவியாரின் மகள் எம்பி. பேரன் மத்திய அமைச்சர் என்று கட்சித் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் ஒரு சேர கசப்பையளித்தார் கருணாநிதி. குடும்ப ஆட்சி என்ற அவப்பெயர் திமுக ஆட்சிக்கு வர வலுவான காரணங்களை கருணாநிதி தானே முன்னிறுத்தினர்.
  3. கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறி அதற்குத் தானே உதாரணமாக வாழ்ந்து செங்கல் செஙகல்லாகக் கட்டி காப்பாற்றிய கட்சியின் சிதைவுக்கும் தானே காரணமாகி விட்டார் கருணாநிதி. தகுதியும் இல்லாத திறமையும் இல்லாத காங்கிரஸுக்கு 41 இடங்களைக் கொடுத்து சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டார்.
  1. கருணாநிதி பேசினால் பத்தாயிரம் வாக்குகள் கிடைக்கும், எம்ஜியார் முகத்தைக் காட்டினாலே லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்ற அண்ணா வெளிப்படையாகக் கூறுவாராம். இன்று நிலைமை தலைகீழ். கருணாநிதி முகத்தைக் காட்டினால் ஆயிரம் வாக்குகள் போகும், பேசினால் பத்தாயிரம் வாக்குகள் போகும் என்றாகிவிட்டது. கோடிக்கணக்கில் இளம் வாக்காளர்கள் கூடியுள்ள யதார்த்தத்தை உணராமல் உயிரோடு இருக்கும் வரை தான்தான் முதல்வர் என்று பிடிவாதம் பிடித்து தானும் கெட்டு தன் பிள்ளையின் அரசியல் வாழ்வையும் கெடுத்த கருணாநிதியின் முதிர்ச்சியின்மை திமுக தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.
  2. கருத்துக் கணிப்புகளில் திமுக வெல்லலாம் என்ற நிலை வந்த போது தமிழக வாக்காளர்கள் பயந்து போனார்கள். அதனால் மற்ற கட்சிகளுக்குப் போட நினைத்த வாக்குகளை அதிமுகவுக்கே போட்டார்கள். இதுதான் 1980ல் எம்ஜியாருக்கு நிகழ்ந்தது. காங்கிரஸ் திமுக கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றவுடன் அப்போதிருந்த எம்ஜியார் அரசைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தினார் இந்திரா காந்தி. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்ற பயம் காரணமாகவே வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். எம்ஜியார் வெற்றி வாகை சூடினார். திமுக மீது பெருவாரியான மக்களுக்கு இன்னும் தீராத அச்சம் இருக்கிறது.
  3. கருணாநிதியின் நிலையான இந்து மத துவேஷத்தால் இந்துக்களிடம் அவரது வாக்கு வங்கி சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டிருக்கிறது. இதை அவர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. சிறுபான்மையினருக்கு சாதகமாக இருப்பதை இந்துக்கள் பொருட்படுத்துவது இல்லை. ஆனால் அது பெரும்பான்மை சமூகத்துக்கு கடும் விரோதமாகவே இருக்கிறது என்ற நிலை வரும்போது பல இந்துக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வெளிப்படையாகவே, ஒரு கண்ணில் வெண்ணையையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது போல (திரு எல் கணேசனின் உவமை) வக்ஃப் வாரிய சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர், இந்து ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா போட்டுக் கொடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சர்வ சாதாரணமாக அறிவித்தார்.

விசாலமான மனத்துடன் மதத்தைப் பற்றி யோசிக்காமல் திமுகவின் கொள்கைகள் மேல் உள்ள பிடிப்பினால் அதற்கு வாக்களித்த இந்துக்கள், தாங்கள் உயர்ந்த கொள்கை உடையவர்களாக இருக்கலாம், ஆனால் ஏமாளிகளாகவும் இருக்கிறோம் என்பதை உணர ஆரம்பித்து விட்டார்கள்.

  1. முன்னாட்களில் தொலைநோக்குச் சிந்தனையோடு ஜெயலலிதா பல திட்டங்களைக் கொண்டுவந்த போதும் அரசு ஊழியர்களின் நியாயமற்ற வேலை நிறுத்தங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிய போதும், தேசிய உணர்வோடும் துணிவோடும் கட்டாய மத மாற்றச் சட்டத்தை கொண்டு வந்த போதும், மாநில நலன்களைக் கருதாமல் அவற்றில் மலிவான அரசியலைப் புகுத்தி, கருணாநிதியும், மற்ற எதிர்க் கட்சிகளும், ஏன் ஊடகங்களும் ஜெயலலிதாவைச் சூழ்ந்து கொண்டு பிரமாண்டமான பிரச்சார மேகங்களை உருவாக்கினார்கள். ஜெயலலிதா தனது நிலையில் சற்றும் தளராமல் துணிந்து நின்றார். ஆனால் தேர்தல் வந்த போது சிறுபான்மையினர் ஜெயலலிதாவுக்கு எதிராக, முழுக்க முழுக்க மதக்காரணங்களுக்காக திருப்பப் பட்டனர். அரசு ஊழியர்களும் அவருக்கு எதிராகத் திரும்பி, வாக்குச் சாவடிகளிலேயே அதிமுகவுக்கு எதிராக வேலை செய்தனர்.

இது பல வருடங்களுக்கு முன் எம்ஜியார் இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை அறிமுகப் படுத்திய போது எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் ஆடிய ஆட்டங்களைப் போன்றதேதான். அந்த முறை எம்ஜியாரின் வாக்கு வங்கியும் கணிசமாகக் குறைந்தது.

இதனை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா, இம்முறை தொலை நோக்குத் திட்டங்களை, அவற்றுக்கு லாயக்கில்லாத தமிழர்களுக்காக வகுக்காமல் எம்ஜியார் பல் பொடி, செருப்பு, மதிய உணவு என்று வழங்கியது போல் மக்கள் மனம் குளிர நடந்து கொண்டார். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் நின்று கொண்டது. ஸ்டேடஸ் கோ அரசாங்கமாகவே ஆட்சி தொடர்ந்தது. அதனாலென்ன, அம்மாவின் வாக்கு வங்கிகளை இலவசங்கள் பத்திரமாக பார்த்துக் கொண்டன. இவ்வாறு ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியாக இராமல், தமிழகத்தின் தேக்கத்துக்கும் கருணாநிதி காரணமானார். அது அவருக்கே எதிராகத் திரும்பியது.

  1. திமுகவின் குறுகிய தோல்விக்கு கருணாநிதியும் அவரது பதவி ஆசையும், இல்லை இல்லை, பதவிச் சபலமும் தான் காரணம். சுப்ரமணியன் ஸ்வாமியின் ஃபார்முலாவை ஒப்புக் கொண்டு ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, தேமுதிக மற்றும் பாஜகவுடன் (பாஜக இல்லாமல் கூட) கூட்டணி அமைத்திருந்தால் திமுக நிச்சயம் ஆட்சியைப் பிடித்திருக்கும்.

(மேலும் தொடரும்)

Advertisements