Bystander

Happenings, impressions and thoughts

இளன் கதை – 4 – The Story of King Ila – 4 — March 2, 2012

இளன் கதை – 4 – The Story of King Ila – 4

இளன் கதை – 4
The Story of King Ila – 4

இவ்வாறு ஒரு வருடம் கடந்த பிறகு, இளை ஆண் உருவத்தை அடைந்த பிறகு, மஹா ஞானியான புதன், இளன் நிரந்தரமாக ஆண் உருவம் பெறுவதற்கான வழிகளைச் சிந்திக்கலானார். இதற்கு உதவுவதற்காக ஸம்வர்த்தர், ச்யவனர், அரிஷ்டநேமி, ப்ரமேதனர், மௌத்கலர், துர்வாஸர் ஆகிய பெரும் முனிவர்களை அவரிடத்துக்கு வருவித்தார்.

அவர்களிடம், “இந்த அரசன் கர்த்தம ப்ரஜாபதியின் புதல்வனான இளன். தங்கள் தவவலிமையால் இவனுடைய நிலைமையைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இவனுடைய சாபம் நீங்கி இவனுக்கு நலம் உண்டாக என்ன செய்யலாம் என்பதைத் தாங்களே கூற வேண்டும்”, என்று கோரினார்.

அந்த பிரம்ம ஞானிகளும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே தவவலிமையால் உயர்ந்த மேலும் பல முனிவர்களான கர்த்தமர், புலஸ்த்யர், க்ரது, வஷட்காரம், ஓங்காரம் முதலியவர்களும் அந்த ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

இப்படிப் பட்ட மஹாமுனிவர்கள் ஓரிடத்தில் சந்தித்ததால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இளனுக்குப் பரம மங்களத்தைச் செய்ய நிச்சயித்து தங்கள் தங்கள் அபிப்ராயங்களைக் கூறலானார்கள்.

அப்போது கர்த்தமர், “பிராம்மணோத்தமர்களே! இளனுக்குப் பரம சிரேயஸைக் கொடுக்கும் உபாயம் ஒன்றே. ரிஷபக் கொடியோனான ஸ்ரீ மஹாதேவரால்தான் இவனுக்குச் சாபம் நேர்ந்தது. அவரால்தான் இதை நீக்கவும் முடியும். அஸ்வமேத யாகம் செய்து அவரைத் துதிப்போம். அதைக் காட்டிலும் அவருக்குப் பிரியமான விஷயம் வேறு எதுவும் இல்லை. ஆகையால் அந்த யாகத்தை நாம் செய்வோம்”, என்றார்.

மற்ற ரிஷிகள் அதற்குச் சம்மதிக்க, ஸம்வர்த்தருடைய சீடரான மருத்தர் யாகத்திற்கு தேவையான பொருட்களைச் சேகரித்து சித்தம் செய்தார்.

பிறகு புதனுடைய ஆஸ்ரமத்திற்கு அருகிலேயே அந்த மஹா யாகத்தை விதிப்படி நடத்தினார்கள்.


முடிவில் ஸ்ரீ ருத்ரன் பரம மகிழ்ச்சியடைந்து அவர்களிடத்தே தோன்றி, அந்த பிராமணர்களை நோக்கி, “இந்த அஸ்வமேத யாகத்தாலும், உங்களுடைய பக்தியாலும் நான் விசேஷ ஸந்தோஷத்தை அடைந்தேன். இந்த அரசனுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினார்.

அந்த ரிஷிகளும் பரம பக்தியுடன் ஸ்ரீ மஹாதேவரை வணங்கித் துதித்து, “ஸ்வாமி! இந்த அரசன் முன்போல் நிரந்தரமாக ஆணாக மாறத் தாங்கள் அருள வேண்டும்”, என்று பிரார்த்தித்தார்கள்.


ஸ்ரீ சங்கரனும், “அவ்வாறே ஆகட்டும்”, என்று அருளி மறைந்தார்.

பிரம்மஞானிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் தங்களிருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.

இளன் புதபகவானை வணங்கி விடைபெற்று தன்னுடைய பழைய நாடான பாஹ்லீக தேசத்தை விட்டுவிட்டு மத்திய தேசத்தில் பிரதிஷ்டானம் என்ற புதிய நகரத்தை நிர்மாணித்து அதனைத் தன் தலைநகரமாக ஆக்கிக் கொண்டு பலகாலம் நல்லாட்சி புரிந்தான்.

காலக்கிரமத்தில் அவன் பிரம்ம லோகத்தை அடைந்தபிறகு அவனுடைய புதல்வன் புரூரவஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்று பலகாலங்கள் தன்னுடைய குடிமக்களுக்கு அற்புதமான ஆட்சியை அளித்தான்.

அஸ்வமேத யாகத்தின் மஹா மஹிமையைக் கூறும் இந்தக் கதையை ஸ்ரீ ராமபிரான் தன்னுடைய இளைய சகோதரர்களுக்கு உபதேசித்தார். இதனைப் படிப்பவர்களும் கேட்பவர்களும், ஸ்ரீ சந்திர பகவான், ஸ்ரீ புத பகவான், ஸ்ரீ ராமபிரான் மற்றும் ஸ்ரீ மஹாதேவர் இவர்களின் நல்லருளோடு மஹாமுனிவர்களின் நல்லாசிகளையும் பெறுவார்கள்.

பாரத தேசத்தின் வடமேற்குப் பிரதேசமே (தற்போதைய பஞ்சாப் மாநிலப் பிரதேசமாக இருக்கலாம்) பாஹ்லீக தேசமாக இருந்ததாகக் கருதப் படுகிறது. குரு வம்சத்தைச் சேர்ந்த சாந்தனு மஹாராஜனின் சகோதரன் இந்தப் பகுதியை ஆண்டதாகவும் இதிஹாச புராணங்களில் கூறப் பட்டிருக்கிறது.

பிரதிஷ்டானம் தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்தில், ஔரங்காபாதிலிருந்து 56 கி.மீ. தொலைவில் கோதாவரி நதிக் கரையில் பைதான் (Paithan) என்ற பெயருடன் இப்போதும் விளங்குகிறது!

பிரதிஷ்டானபுரம் என்ற பெயரில் பிந்நாட்களில் முதல் சாதவாஹன அரசனின் தலைநகரமாகத் திகழ்ந்தது இந்நகரம். இவ்விடத்‌திலிருந்து சாதவாஹனர்கள் கிட்டத்தட்ட இந்தியாவின் பாதிபாகத்தை ஆண்டார்கள்!

மஹாராஷ்டிரத்தின் உயர்ந்த தவசீலரான ஏகநாதர் இந்நகரத்தைச் சேர்ந்தவரே!


இளோபாக்யானம் – 3 (ILOPAKYANAM – 3) — January 13, 2012

இளோபாக்யானம் – 3 (ILOPAKYANAM – 3)

இளன் கதை – 3
The Story of King Ila – 3

 பின்னர் புதன் தனியே விடப்பட்ட இளையை நோக்கி, “பெண்ணே! நான் ஸோம தேவதையின் மகன். என்னிடத்தில் அன்பு வைத்து எனக்கு மனைவியாயிரு”, என்றார். அதற்கு இளை சம்மதிக்க இருவரும் மணம் புரிந்து கொண்டார்கள். வஸந்தகாலம் அவர்களுக்கு இனிமையாகக் கழிந்தது.

ஆனால் ஒரு மாதம் முடிந்த அடுத்த கணமே, இளை, இளனாக விழித்துக் கொண்டாள். அப்போது புதன் யாதொரு ஆதாரமும் இல்லாமல், கைகளை உயரத் தூக்கிக் கொண்டு ஏரியின் நடுவே கடும் தவம் செய்து கொண்டிருப்பதை இளன் கண்டான்.

இதற்கு முன் நடந்தவற்றை மறந்துவிட்ட இளன் அவரிடம் சென்று, “மகரிஷியே! நான் என்னுடைய படைகளுடனும், பரிவாரங்களுடனும் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது இந்த மலையில் நுழைந்தேன். சற்று முன் கண் விழித்துப் பார்த்த போது அவர்கள் யாவரையும் காணவில்லை. என்னுடைய படைவீரர்களும் பரிவாரங்களும் எங்கேயென்று தங்களுக்குத் தெரியுமா?” எனப் பணிவுடன் கேட்டான்.

புதன் அவனுக்கு இனிமையான சொற்களினால் ஆறுதல் அளித்து அவனை அமைதிப் படுத்தினார். இதற்குமுன் நடந்த நிகழ்ச்சிகள் அவனுடைய நினைவில் இல்லை என்பதை உணர்ந்த புதன் அவனை மீண்டும் சமாதானம் செய்து, “மஹாராஜா! வருத்தப் படாதே. நடந்தவற்றைக் கூறுகிறேன், கேள். இந்த வனத்துக்கு வேட்டையாடுவதற்காக வந்த நீயும் உன் பரிவாரங்களும், கோரமான கல்மழையில் சிக்கிக் கொண்டீர்கள். அதில் உன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மடிந்தார்கள். பெரும் காற்றாலும் மழையாலும் அலைக்கழிக்கப் பட்ட நீ என்னுடைய ஆசிரமத்தை வந்தடைந்து தூங்கி விட்டாய். இனி கவலையை விடுத்து பயமில்லாமால் இரு. பழங்களையும் கிழங்குகளையும் உண்டு இங்கேயே இஷ்டப்படி இரு”, என்றார்.

அவருடைய கனிவான சொற்களால் இளன் சற்றே ஆறுதல் அடைந்தான். இருப்பினும் பெரும் மனவருத்தமடைந்திருந்த அவன், புதனை நோக்கி, “ஸ்வாமி! என்னைச் சேர்ந்தவர்கள் இறந்தபின் எனக்கு இங்கே என்ன வேலை? மேலும் என்னுடைய நாட்டை விட்டு நான் இங்கே இருப்பதும் முறையாகாது. ஆகையால் தயை கூர்ந்து என் நாட்டுக்குத் திரும்ப எனக்கு உத்தரவு கொடுங்கள். ஒரு வேளை நான் இங்குதான் இருக்க வேண்டும் என்று தாங்கள் கருதினாலும், என் மூத்த புதல்வனான சசபிந்துவுக்கு அரசுப் பட்டம் கட்டிவிட்டு நான் இங்கு திரும்பி வந்து விடுகிறேன். அவன் தர்மாத்மா. புகழ் பெற்றவன். தன்னுடைய நாட்டை நீதியுடனும் நேர்மையுடனும் ஆள்வான். மனைவி, மக்கள், சுற்றத்தார், நண்பர்கள், என்னுடைய குடிமக்கள் முதலியவர்களை விட்டுத் தனியாக இருக்க எனக்கு மனம் வரவில்லை. ஆகையால் தாங்கள் என்னைத் தடுக்கக் கூடாது”, என்று பிரார்த்தித்தான்.

இருந்தாலும் அவனுடைய அப்போதைய நிலையில் அவன் திரும்பவும் நாடு செல்வது அவனுக்குத் துன்பத்தையே தரும் என்பதை நன்கு உணர்ந்திருந்த புதன் மீண்டும் அவனைச் சமாதானம் செய்து, “அரசனே, நான் சொல்வதைக் கேள். இப்போதைக்கு நீ இங்கு இருப்பதே உனக்கு நலம். உன் குல கோத்திரங்களை நான் அறிவேன். வருத்தமடையாதே. ஒரு வருடம் வரை நீ இங்கு தங்கியிருந்தால் உனக்கு நான் பரம நன்மையைச் செய்து வைப்பேன்”, என்றார்.

அந்த மகா முனிவரின் சொல்லுக்குக் கட்டுப் பட்ட இளன் அங்கேயே இருக்கச் சம்மதித்தான்.

ஒரு மாதம் பெண்ணாய் புதனுடன் சுகங்களை அனுபவித்தான். அடுத்த மாதத்தை தர்மத்தில் நோக்கமுடைய ஆணாய்க் கழித்தான்.
 

 

Budha with his consort Ila

புதன் தனது மனைவி இளையுடன்

ஒன்பது மாதங்கள் கழிந்தபின் இளை ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள். ஒளி வீசும் அழகிலும், வடிவத்திலும் தன்னை ஒத்திருந்த அந்தக் குழந்தைக்கு புரூரவஸ் என்ற பெயரளித்து ஒரு வருடம் வரை புத பகவானே அதை வளர்த்தார். அது வரையிலும் இளனுக்கும் தர்ம கதைகளைச் சொல்லி அவனை அங்கே தங்க வைத்தார்.

தொடரும் …….

இளோபாக்யானம் – 2 (ILOPAKYANAM – 2) — January 1, 2012

இளோபாக்யானம் – 2 (ILOPAKYANAM – 2)

இளன் கதை – 2
The story of King Ila – 2

இவ்வாறு பெண் வடிவம் பெற்ற இளன், இளை என்ற பெயருடன் அவனைப் போல் பெண்ணுருவம் கொண்ட அவனது பரிவாரங்களுடன் அந்த வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ரம்மியமான ஏரியைக் கண்டான். அங்கே பல வண்ணங்கள் கொண்ட பறவைகள் இனிமையாகக் கூவிக் கொண்டிருந்தன. அந்த அழகிய ஏரியின் நடுவே சந்திரனுடைய புதல்வனான புதன் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். அழகில் பூர்ண சந்திரனையும் தன்னுடைய ஒளியால் அக்கினி தேவனையும் மிஞ்சும் விதமாக அவர் பிரகாசித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு மஹாத்மா அங்கே தவம் செய்து கொண்டிருந்த போதிலும், இளை அதைப் பொருட் படுத்தாமல் தன் தோழிகளுடன் ஏரியில் இறங்கி விளையாடத் தொடங்கினாள்.

புதனது தவம் அப்போது கலைந்தது. கண் விழித்துப் பார்த்த அவர் தனக்கு முன் தான் இதுவரை கண்டிராத அழகுடன் ஒரு நங்கை நீரில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு தவத்திலிருந்த தனது கவனத்தைச் சிதற விட்டார். அவர் மனதில், ‘இவள் யார்?, மூன்று உலகங்களிலும் இப்படி ஒரு ரூப லாவண்யத்தையும், ஒளி பொங்கும் அழகையும் நான் கண்டதில்லையே! தேவ, அசுர, நாக, யக்ஷ, கந்தர்வ, அப்ஸர கணங்களில் கூட இவளைப் போன்ற அழகுடைய மங்கை ஒருத்தி இருப்பாளோ! இவள் வேறு ஒருவருக்கும் மனைவியாக இல்லையெனில், நான் திருமணம் செய்து கொள்ளத் தகுந்தவள்’, என்று எண்ணி, இளமையினாலும், ஆசையினாலும், தவத்திலிருந்த கவனத்திலிருந்து விடுபட்டு, நீரிலிருந்து கரைக்கு வந்தார்.

Budha - one of the Navagrahas (9 planets)

புதன்

அவருடைய ஆசிரமத்தை அவர் அடைந்து அங்கிருந்த இளையின் தோழிகளை அழைத்து, “இந்தப் பெண் யார்? இங்கே நீங்கள் வந்த காரணமென்ன? தயக்கமில்லாமல் உண்மையைச் சொல்லுங்கள்,” என்றார்.

அவர்கள் அவருடைய இனிமையான சொற்களினால் மகிழ்ச்சியடைந்து அந்த மஹாபுருஷரை பணிவோடு நமஸ்கரித்து, “ஸ்வாமி, இவள் எங்களுக்கு அதிபதி; கன்னி; எங்களுடன் இந்த வனத்தில் வேடிக்கையாகக் காலம் கழித்துக் கொண்டிருக்கிறாள்”, என்று கூறினார்கள். அதற்கு மேல் அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை.

அதைக் கேட்டு வியப்படைந்த புதன், ‘ஆவர்த்தனி’ என்ற திறமையினால் நடந்த நிகழ்ச்சிகளை உணர்ந்தார்.

அதன் பின் அவர் அந்தக் கன்னிகளை நோக்கி, “பெண்களே, நீங்கள் கிம்புருஷர்களாக இந்த மலைச் சாரல்களில் வசித்துக் கொண்டிருங்கள். உங்களுக்குத் தகுந்த பர்ணசாலைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ருசியுள்ள பழங்களும், கிழங்குகளும், வேர்களும் உங்களுக்கு வேண்டிய வரையில் கிடைக்கும். கிம்புருஷர்களைத் தேடி திருமணம் செய்து கொள்ளுங்கள்”, என்றார். அவருடைய யோக பலத்தால் அவர்கள் கிம்புருஷப் பெண்களாக மாறி அந்த மலையில் வசிக்கத் தொடங்கினர்.

தொடரும் ………….

இளோபாக்யானம் —

இளோபாக்யானம்

இளன் கதை

இந்தக் கதை வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம் 87, 88,89 மற்றும் 90வது ஸர்க்கங்களில் ÿராமபிரான் தனது இளையவர்களுக்குக் கூறுவதாக வருகிறது.

முன் காலத்தில் பாஹ்லீக தேசத்தை இளன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் கர்த்தமப் பிரஜாபதியின் மைந்தன். இந்தப் பூமியை தன் வசப் படுத்தி தர்மமாய்த் தன் பிள்ளையைப் போல் பரிபாலித்து அரசாண்டு வந்தான். தேவ, தைத்ய, நாக, ராக்ஷஸ, கந்தர்வ, யக்ஷ கணங்களும் மற்றவர்களும் அவனிடத்தில் பயந்து அவனை எப்பொழுதும் கொண்டாடிப் பூஜித்து வந்தார்கள்.

அவன் கோபம் கொண்டால் ஸகலப் பிராணிகளும் நடு நடுங்கின.

தர்மத்திலும் வீரியத்திலும் புத்தியிலும் கீர்த்தியிலும் நிகரற்றவனாய் அவன் விளங்கினான்.

ஒரு நாள் அவன் தன் பரிவாரங்களுடன் வேட்டையாடுவதற்காகக் கானகம் சென்றான்.

எண்ணிறந்த மிருகங்களை வேட்டையாடியும் திருப்தி அடை யாமல் அவன் பலவித ஜந்துக்கள் இருந்த வேறொரு வனத்தைச் சென்றடைந்தான்.

அது முருகப் பெருமானான கார்த்திகேயன் பிறந்த வனம்.

அப்போது மனோஹரமான வஸந்த ருது, சித்திரை மாதம். இளனும் அவனுடைய பரிவாரங்களும் அங்கே சென்ற போது பரமசிவன் பார்வதி தேவியுடனும் பிரமத கணங்களுடனும் அங்கே வேடிக்கையாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது பத்தினியின் விருப்பப் படி ஸ்த்ரீ ரூபமெடுத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த ஆண் மிருகங்களும், பறவை களும், மரம் செடி கொடி என்று மற்ற எல்லா உயிரினங்களும் பெண்பாலாய் மாறின!


இளன் அந்த வனத்தை அடைய அவனும் அவனைச் சேர்ந்த அனைவரும் பெண்களானார்கள்! இதென்ன அநியாயம் என்று கருதி இளன் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தான்.

பிறகு இது பரமசிவனுடைய செயலே என்று அறிந்து, “பிழை செய்தோமே” என்று வருந்தி அவன் சங்கரனைக் கண்டு அவர் பாதம் சரணடைந்தான். பின் சிவ பெருமானைத் துதித்து, “ஸ்வாமி! என் பிழையை மன்னித்து நானும் என் பரிவாரங்களும் முன்போல் ஆண் வடிவம் பெறத் தாங்கள் அருள் புரிய வேண்டும்”, என்று துதித்து நின்றான்.

மஹாதேவன் சிரித்து, “ராஜ ரிஷியே! எழுந்திரு. மீண்டும் ஆண்மகனாவதைத் தவிர வேறு ஏதாவது வரம் கேள்”, என்றார். தன் விருப்பம் நிறைவேறாததால் வருத்தமடைந்த இளன் சிவ பிரானிடத்தில் வேறு ஏதும் வரம் கோராமல் அன்னை பார்வதியினைச் சரணடைந்து அவளைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, “தாயே, லோகேஸ்வரியே, வரங்களையருளும் கர்ப்பகத் தருவே! உன்னைத் தரிசித்தவர்க்கு ஒரு குறைவுண்டோ? உன் கிருபா கடாக்ஷத்தால் என்னைக் கண்டருள்”, என்று பலவாறு பிரார்த்தித்து நின்றான்.

அவனுடைய விருப்பத்தை அறிந்த உமையவள் பரமசிவனிடத்தில் அதைத் தெரிவித்துப் பின் இளனைக் கருணையுடன் நோக்கி, “ராஜரிஷியே! நீ கேட்கும் வரத்தில் பாதி சங்கரனால் கொடுக்கப் படும். நான் பாதியைக் கொடுப்பேன். ஆகையால் உனக்கு ஆண் தன்மை வேண்டுமா அல்லது பெண் தன்மை வேண்டுமா? இரண்டில் ஒன்றைக் கேள்” என்றார்.

இளன் மகிழ்ச்சியடைந்து, “தாயே! தங்கள் அருளால் நான் ஒரு மாதம் நிகரற்ற எழிலுடைய பெண்ணாகவும் ஒரு மாதம் ஆண் மகனாகவும் இருக்க வரம் தாரீர்”, என்று வேண்டினான். ருத்ராணியும், “அவ்வாறே ஆகட்டும். ஆனால் நீ ஒரு நிலையில் நடப்பவற்றை மற்றொரு நிலையில் மறந்து போவாய்”, என்று வரம் அளித்தார்.

அவ்வாறே இளன் ஒரு மாதம் ஆணாகவும் அடுத்த மாதம் பெண்ணாகவும் காலம் கழித்தான்.

தொடரும் ……..